Friday, August 22, 2014

...என்றார் சூஃபி - part-8

33 

’நகர்ந்து கொண்டிருக்கும் நத்தைக்குத் திடீரென்று பார்வையுடன் கண்கள் கிடைத்துவிட்டால் என்ன செய்யும்?’ என்று கேட்டார் சூஃபி.

நாங்கள் ஒவ்வொருவரும் யோசிக்கத் தொடங்கினோம். நத்தைக்குக் கண்கள் இல்லை. எனவே அது பிரபஞ்சத்தை இரட்டைப் பரிமாணமாகவே உணர்ந்து கொண்டு வாழ்கிறது. இரு பரிமானத்திலேயே நகர்கிறது. அல்லாமா இக்பாலின் “Six Lectures on the Reconstruction of Religious Thought in Islam” என்னும் நூலில் இக்கருத்து விளக்கப்படுவதை நினைவு கூர்ந்தேன். ஒருவேளை அதனால்தான் அது நிதானமாக நகர்கிறதோ என்னவோ? என்று நினைத்துக் கொண்டு பதில் சொன்னேன், ‘நத்தைக்குக் கண்கள் கிடைத்து விட்டால் அதன் வேகம் அதிகமாகிவிடும்.”

”நிச்சயமாக இல்லை. நத்தை திகைத்து நின்றுவிடும் அன்பர்களே! ”’எங்கே’ இருக்கிறோம்?’ என்றொரு புதிய குழப்பம் வந்து ஸ்தம்பித்துவிடும். மேலும் இடம் என்பதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும். எங்கே செல்வது என்னும் பிரச்சனை புதிதாக முளைத்துவிடும். அதற்கு விடை தெரியாமல் முழிக்கும், புதிகாகக் கிடைத்த கண்களை வைத்துக் கொண்டு! இதயத்தில் இரண்டு விழிகள் உண்டல்லவா? அது சட்டென்று திறந்து கொண்டதும் பக்தன் சிறிது காலத்திற்கு மௌனியாகி விடுகிறான்” என்றார் சூஃபி.

34

“குர்ஆன் ஓதப்படுகிறது. அதனைச் செவியுறும் நீங்கள் யாரை நினைவு கூர்வீர்கள்?” என்று கேட்டார் சூஃபி.

இதற்கென்ன கேள்வி? என்பது போல் எண்ணினேன். ”அல்லாஹ்வைத்தான் நினைவு கூர்வோம்” என்று எங்களில் சிலர் பதில் சொன்னோம். மௌனமாக இருந்தவர்களின் பதிலும் அதுதான். அவர்கள் ஆமோதித்துத் தலையாட்டினார்கள்.

“அதாவது, குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வேதம். அவனின் பேச்சு – கலாம். எனவே அதனைச் செவியுறும்போது அவனின் நினைவு வருகிறது. சரி. மற்ற ஒலிகளில் ஓசைகளில் அவனை நீங்கள் நினைவு கூர்வதில்லை அல்லவா? ஆனால், ஒலிகளுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பதே அவனின் சிஃபத்தெ கலாம் என்னும் தெய்விகப் பண்புதான் அல்லவா? ஒலிகளுக்குள் அவனின் குரலைக் கேட்க வேண்டும் எனில் வேறு இரு செவிகள் வேண்டும்.

’இறைவா!
உன் நினைவிற்காக
என் இதயத்தின் செவிகளைத்
திறந்திடுவாயாக!’
என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள் (அல்லாஹும் மஃப்தஹ் மசாமிஅ கல்பீ லிதிக்ரிக்).

இந்த அனுபவத்தில் ஆழ்ந்திருந்த ஒரு நேரத்தில்தான் தெருவில் நாய் ஒன்று குரைத்த போது அபூயஜீத் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் சட்டென்று ‘லப்பைக்க’ – ‘உனக்குச் செவிசாய்த்தேன்’ என்று பரவத்தில் கூறினார்கள்.


இதயத்தின் செவிகள் திறந்துவிட்டால் கேட்கும் மொழிகளில் எல்லாம், ஒலிகளில் எல்லாம் உள்ளுறையும் இறைநாதம் கேட்கும்” என்றார் சூஃபி.

Saturday, August 16, 2014

அந்தரிசை


உன் பெயரின்
உச்சாடனம்
சிலபோது
குருவியின்
கூடு பின்னல்
சிலபோது
வண்ணத்துப்பூச்சியின்
கூடு கலைதல்

உரக்க நான்
உச்சரிக்கும்
உன் பெயர்
எல்லோரின் செவிக்கும்
எட்டலாம்

உன் பெயருக்கான
என் இதயத்தின் இசை
நீ கேட்க மட்டுமே

எல்லா மொழியிலிருந்தும்
என்னிடம் பேசினாய்
மௌனமாய்

எல்லா மொழியிலும்
உன்னைக் கேட்டுக்கொண்டேன்
மௌனமாய்

இப்படித்தானே
மெல்ல மெல்ல
அழைத்துச் சென்றாய்
உன் அந்தரிசைக்கு
என்னை நீ

Monday, August 11, 2014

தவளையும் எலியும்


       பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் இறைவனின் இருப்புக்கான அத்தாட்சி. அவனது அறிவின் வெளிப்பாடு. அவன் தன் உள்ளமையில் காட்டிக் கொண்டிருக்கும் அடையாளம். அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஊடகம். என் குருநாதர் அடிக்கடி கூறுவது போல் ‘ஹக் ழாஹிர் ப சூரத்தெ ஷை’ (பொருளின் கோலத்தில் சத்திய ஏகப் பரம்பொருளின் வெளிப்பாடு’).

      ”ஒவ்வொரு பொருளும் தனித்தன்மையானது. நகல் பிரதிகளை இறைவன் படைப்பதில்லை. கோடிக் கணக்கான மரங்களில் கோடானு கோடி இலைகள் இருக்கலாம். ஒன்றைப் போல் மற்றொன்று இல்லை. நீயும் அப்படியே. நீ இல்லை எனில் இப்பிரபஞ்சம் குறையுள்ளதாகவே இருந்திருக்கும்” என்பார் ஓஷோ.

      சூஃபி ஞானிகளில் ஒருவரான ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்கள் ஒருமுறை நதிக்கரை ஒன்றில் நடந்து கொண்டிருந்தார்கள். அழகான கூழாங்கற்கள் நெடுக விரவிக் கிடந்தன. அதிலொரு கல் வித்தியாசமான வடிவில் அழகாக இருக்கவே அதனை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஜுனைது தன் கையில் எடுத்துக் கொண்டார்கள். உடனே அவர்களின் மனத்தில் ஒரு ஞான மின்னல் வீசியது. இப்பிரபஞ்சத்தில் எது எது எங்கே இருக்க வேண்டும் என்னும் நியதி இறைவனின் ஞானத்தில் உள்ளது. அந்த நியதியின் படி இந்தக் கற்கள் இங்கே இருக்கின்றன. அந்த அமைப்பை மாற்றுவதற்கு நாம் யார்? என்னும் சிந்தனை அவர்களின் மனநிலையின் மீது மிகைத்து நின்றது. உடனே அந்தக் கல்லை அது முன்பு இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு நகர்ந்து சென்றார்கள்.

      இதைச் சொல்லும் போது எனக்கொரு சம்பவம் நினைவு வருகிறது. எம் தாதா பீர் (குருநாதரின் குருநாதர்) ஜுஹூரி ஷாஹ் நூரீ (ரஹ்) அவர்களின் தர்கா ஷரீஃபில் நடைபெறும் உரூஸ் என்னும் வருடாந்திர விழாவிற்காக மூன்று மாதங்களுக்கு முன் கேரளாவின் கருவாரக்குண்டு என்னும் ஊருக்குச் சென்றிருந்தோம் (பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வழியாக இரண்டு மணிநேரப் பயணம், காரில்). அழகிய கிராமமான கருவாரக்குண்டில் கானாறு ஒன்று ஓடுகிறது. ஒன்றரை மணிநேரம் அதில் சிறுவர்களைப் போல் குளித்து விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த நதியின் படுகையெங்கும் பெரிய சைஸ் கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன. இப்றாஹீம் மவ்லா தன் வீட்டின் நடுவில் வைத்திருக்கும் இண்டோர் தோட்டத்திற்காக ஏற்கனவே கூழாங்கற்கள் தேடிக் கொண்டிருந்தார். இது ஒரு அருமையான ஜாக்பாட். ஞானப் பக்கிகளாகிய நாங்கள் முடிந்த வரை அள்ளி ஒரு சாக்கில் போட்டுக் கொண்டோம். இறைவனின் ஞானத்தில் உள்ள நியதியின் படியான அமைப்பை நாங்கள் மாற்றி விட்டோமா? இல்லை என்று சொல்லலாம். அவை இப்றாஹீம் மவ்லாவின் வீட்டுத் தோட்டத்தில் இருக்க வேண்டும் என்பது இறைவனின் நியதி! அதனால்தான் எங்கள் மனத்தில் அவற்றை அள்ளிக் கொண்டுவரும் உணர்வு மிகைத்திருந்தது என்று சொல்லலாம் அல்லவா?

      ”உன்னுடைய எந்தக் காரியத்தையும் நீ இழிவாகப் பார்க்காதே. அந்தக் காரியத்தைப் படைத்து தன் உள்ளமையில் வெளிப்படுத்தி வைத்த போது இறைவன் அதனை இழிவு படுத்தவில்லை” என்கிறார்கள் முஹையுத்தீன் இப்னுல் அரபி (ரஹ்) (நூல்: ஃபுத்தூஹாத்தெ மக்கிய்யா, அத்தியாயம்#67, பகுதி:4.9.)

      இதே பார்வையில் ஒவ்வொரு வஸ்துவையும் நோக்கும் போது அதை இறைவன் தன் உள்ளமையில் காட்டிக் கொண்டிருப்பதே அந்த வஸ்துவை நாம் இழிவாகப் பார்க்க வேண்டாம் என்பதற்குப் போதுமானதாகிறது என்று உணர்கிறோம். நேற்றைய முன் தினம் நடந்த தியானக் கூட்டத்தில் பேசும்போது ஒரு கருத்தைச் சொன்னேன்:

      ”அனைத்து அறிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன் ’அலீம்’. அறிவு முழுமையும் அவனின் திருக்கல்யாண குணம். அவன் அருளிய வேதம் சொல்கிறது: ‘வஹுவ மஅக்கும் ஐனமா குன்தும்’ (நீங்கள் எங்கிருந்த போதும் அவன் உங்களுடன் இருக்கிறான்’. ஒரு மனிதரை அறிவாளி என்று மக்கள் புகழ்கிறார்கள். காரணம் அவரின் பேச்சு அறிவுபூர்வமாக இருக்கிறது. விஷயம் என்னவெனில் அல்லாஹ் அவருடன் இருந்து அவரைத் தன் ஞானத்தில் அறிஞராகக் கண்டு அவரில் அந்த அறிவுகளை வெளிப்படுத்தி வைக்கிறான். அதாவது அறிவு என்று மக்கள் பார்ப்பவற்றை அவரில் வெளிப்படுத்தி வைப்பது இறைவனின் அறிவுதான். எனவே அவரில் வெளிப்படும் ’அறிவு’ இறைவனின் அறிவிற்கான அத்தாட்சியாக உள்ளது. ஒரு மனிதரை மக்கள் முட்டாள் என்று ஏளனம் செய்கிறார்கள். காரணம் அவரின் பேச்சு முட்டாள்தனமாக இருக்கிறது. விஷயம் என்னவெனில் அல்லாஹ் அவருடன் இருந்து அவரைத் தன் ஞானத்தில் விகடனாகக் கண்டு அவரில் அந்த அபத்தங்களை வெளிப்படுத்தி வைக்கிறான். அதாவது தமாஷ் அல்லது அபத்தம் என்று மக்கள் பார்ப்பவற்றை அவரில் வெளிப்படுத்தி வைப்பது இறைவனின் அறிவுதான். எனவே, அவரில் வெளிப்படும் ‘முட்டாள்தனம்’ இறைவனின் அறிவிற்கான அத்தாட்சியாகவே உள்ளது. சிருஷ்டியில் வெளிப்படுவது அறிவாக இருந்தாலும் முட்டாள்தனமாக இருந்தாலும் அவை இறைவனுக்கான அத்தாட்சிகளாகவே உள்ளன. ஏனெனில் அவை இரண்டிற்கும் பின்னணியாக இருப்பது இறைவனின் பேரறிவே!”

      இப்படி இருக்க, பிரபஞ்சத்தில் எவரையும் எதனையும் நாம் கேவலமாகப் பார்க்க முடியாது. ஒவ்வொன்றிலும் அவனின் வெளிப்பாட்டைக் கவனிக்கும் போது, ’படைப்பு அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பம் என்று ’நபி (ஸல்) அவர்கள் சொன்னதன் உட்பொருளை நம் அகப்பார்வை ஆகிறது.

      இப்படியாக ஒரு புள்ளியிலிருந்து விரிந்து பரந்து, ‘யாதும் ஊரே யாதும் கேளிர்’ என்று தேவதேவன் சொன்ன நிலையில் மனம் திளைத்திருந்த போது சையத் இப்றாஹீம் மவ்லாவிடம் சொன்னேன்: ‘இலக்கியங்களை வாசிப்பதன் பயன் இந்த நோக்கமாதல் வேண்டும். பிரபஞ்சத்தில் ஒவ்வொரு மனிதனுடையவும் ஒவ்வொரு உயிரினத்துடையவும் ஒவ்வொரு பொருளினுடையவும் இருப்பின் இன்றியமையா அழகை ரசிக்க. ஒரு சில கதைச் சொல்லிகளை நான் உங்களுக்குச் சிபாரிசு செய்கிறேன். இந்தியா நெடுகப் பல இடங்களில் பணியாற்றி இன்று சென்னைவாசி ஆன பின்னும் உள்ளத்தில் இன்னமும் கரட்டுப் பட்டிக்காரராகவே இருக்கும் யுவன் சந்திரசேகர். தற்கால எழுத்தாளர்களில் என்னை வெகுவாகக் கவர்ந்த கதைச் சொல்லி. படித்துப் பாருங்கள்.’

      இதை நான் சொல்லி சில நாட்களே ஆகின்றன. யுவன் எழுதிய “ஏமாறும் கலை” என்னும் சிறுகதைத் தொகுதி நூலைக் கல்லூரியிலிருந்து எடுத்து வந்து வாசித்துக் கொண்டிருந்தேன். அதற்குக் காரணமாக அமைந்தது ஒரு மன உந்துதல்.

      கடந்து போன ரமலான் மாதத்தில் ஒளிபரப்பான சஹர் நேர ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகான் சுபூரி ஷாஹ் ஃபைஜி அவர்கள் ஒருநாள் சொன்னார்கள்: “முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொதுவில் புகழ்ந்து பேசுவார்கள். தமக்குள் பரிகசித்துப் பேசுவார்கள். நபியின் பள்ளியிலேயே வந்திருந்து அப்படிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அபூபக்கர் (ரலி) அங்கே வந்தால் உடனே நபியைப் பற்றி வானளாவப் புகழ்ந்து பேசுவார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் மிகவும் மகிழ்ந்து போவார்கள்; அந்த முனாஃபிக்குகளின் பேச்சை அப்படியே நம்பி விடுவார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் மனம் அத்தனை வெள்ளையாக இருந்தது. சூது வாது என்றால் என்னவென்றே அறியாத பரிசுத்த உள்ளம் அவர்களுடையது.”

      யுவன் எழுதிய ‘ஏமாறும் கலை’ என்னும் சிறுகதையில் வரும் தணிகாசலம் சொல்கிறான்: “சொல்லலாம்டா, ஏமாளின்னு யாரெ வேணும்னாலும் சொல்லலாம். யாரையுமே ஏமாத்தறதும் ஈஸிதான். ஆனா, ஏமார்றது இருக்கே, அது எல்லாராலெயும் முடியாது பாத்துக்க. அது ஒரு தனீக் கலெ. ஏமார்றதுக்கு எம்புட்டு சுத்தமான மனசு வேணும்ங்கிறே?’

      இதே நூலினுள் ‘மறுவிசாரணை’ என்றொரு சிறுகதை. அதிலிருந்து ஒரு பகுதி: “அவதார் சிங் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பக்கத்தில் நின்று பாவ் பாஜி தின்று கொண்டிருந்த இளம்பெண் முறைத்தாள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவதார் சிங் தொடர்ந்தார்: ... இவள் அந்த ஆள்மீது நாலைந்து வழக்குகள் போட்டிருக்கிறாள். தொழில்ரீதியாக வாங்கிய லஞ்சத்துக்கு ஏற்ப அவர் காரியங்களை முடித்துக் கொடுக்காததுதான் காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள். ஏதாவது ஒரு வழக்கில் எதிர்மறையாகத் தீர்ப்பு வந்தாலும் போதும், அந்த ஆளின் அரசியல் தொடர்புகள் எல்லாமே அதோ கதியாகிவிடும் என்கிறார்கள். இவள் தன் உயிருக்கு ஆபத்து என்று பாதுகாப்பு கோரி மனுக் கொடுத்திருப்பதாகவும் கேள்வி. ஆக, கயிற்றால் கட்டிக்கொண்டு நட்பு வளர்த்த தவளையும் எலியும், அடிபட்ட புலியும் தப்பி ஓடும் இரையுமாக இப்போது மாறிவிட்டன.”

      இந்தப் பகுதியைப் படித்த போது என் வாசிப்பு சற்று நேரம் நின்றுவிட்டது. ‘கயிற்றால் கட்டிக் கொண்டு நட்பு வளர்த்த தவளையும் எலியும்’ என்னும் குறிப்பு இன்னொரு நூலுக்குள் என்னை கடத்திச் சென்றுவிட்டது. மனதிற்குள் திறந்து கொண்ட அந்த நூலுக்குள் சில நேரம் மானசீகமாக உலவினேன். நான் மிகவும் நேசிக்கும் சூஃபி ஞான நூல்களில் முக்கியமானதொரு நூல் அது. மவ்லானா ரூமியின் ’மஸ்னவி’. தவளையும் எலியும் கயிற்றால் தம்மைக் கட்டிக் கொண்டு நட்பு வளர்த்த ‘ஞானக் கதை’யை அதில் ரூமி சொல்லித்தான் முதன் முதலில் கேட்டேன். அந்தக் குறிப்பை இங்கே போகிற போக்கில் யுவன் சொல்லிச் செல்கிறார். ஒருவேளை அந்தக் கதை ‘பஞ்ச தந்திரா’ நூலில் இருப்பதாக வேண்டும். பஞ்ச தந்திரத்தின் வேறு சில கதைகள் மஸ்னவியில் காணப்படுகின்றன. சிங்கத்திடம் சென்ற முயல், குருடர்கள் தரிசித்த யானை போன்ற கதைகள். அந்தக் காலத்தில் கதைகள் நாடு விட்டு நாடு பயணம் போயிருக்கின்றன. நாடோடிகள் என்பவர்கள் கதைச்சொல்லிகளாகத் திரிந்திருக்கிறார்கள். மவ்லானா ரூமி அவர்களே பல தேசங்களில் பயணம் செய்தவர்தான். வேடிக்கைக் கதைகள் அவனின் பார்வையில் சூஃபி ஞானக் கதைகளாக மாறின. இந்தத் தவளை-எலி நட்புக் கதையும் அப்படித்தான். இனி கதையைக் கேளுங்கள் (கோல்மன் பார்க்ஸ் பிரதியின் வழியாக அடியேனின் வெர்ஷன்).

“ஒரு எலியும் ஒரு தவளையும் தினமும் வைகறை நேரத்தில் ஆற்றங்கரையில் சந்தித்துக் கொண்டன. தரையின் ஒரு மூலையில் அமர்ந்து அவை உரையாடின.

ஒவ்வொரு காலையும், அவை ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்ட கணத்தில், இலகுவாக மனம் திறந்து கொண்டன, கதைகளும் கனவுகளும் ரகசியங்களும் பேசியபடி, சொல்வதா வேண்டாமா என்பதில் அச்சமோ தயக்கமோ ஏதுமில்லாமல்.

அவை இரண்டையும் பார்த்தால் கவனித்தால் நமக்குப் புரியும், முன்னோர் எழுதியிருக்கும்படி, சில நேரங்களில் இரு ஆன்மாக்கள் ஒன்றாகும்போது அங்கே இறைவன் காட்சியாகிறான்.

சட்டென்று சிரிப்புடன் அந்த எலி சொல்லத் தொடங்குகிறது, ஐந்து வருடங்களில் அது சிந்தித்தே பார்க்காத ஒரு கதையை! அது சொல்வதைப் பார்த்தால் கதை முடிய இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம் போல! அனைத்தையும் வாரி அள்ளி அடித்துச் செல்லும் அந்தப் பேச்சு நதியின் பாய்ச்சலைத் தடுப்பது எதுவுமில்லை. உண்மையான நெருக்கம் அது.

இவ்விரண்டிடம் விரக்திக்கு ஒருபோதும் வாய்ப்புக் கிடைப்பதில்லை.
இறையடியார் கிள்ரு, வறுத்த மீனைத் தொட்ட மாத்திரத்தில் அது உயிர் பெற்றுப் பாத்திரத்திலிருந்து வெளியே துள்ளி குதிக்கிறது.

நண்பனுடன் நண்பன் அமர்கிறான். வேதவரிகள் விரிகின்றன. ஒருவர் நெற்றியில் ஒருவர் ரகசியங்களை வாசிக்கின்றனர்.

ஒரு நாள் எலி குறைப்பட்டுக் கொள்கிறது, ‘உன் அருகிருத்தலை (சுஹ்பத்) நான் தேடும் நேரங்கள் உண்டு. நீயோ அப்போது என் குரலைக் கேட்க முடியாத இடங்களில் நீருக்குள் மூழ்கித் திரிகிறாய்.

குறிப்பிட்ட இந்த நேரத்தில் சந்திக்கின்றோம் நாம். ஆனால் குர்ஆன் சொல்வது என்ன? நேசர்கள் நிரந்தரமாகத் தொழுகையில் இருக்கிறார்கள்!

நாளில் ஒருமுறை, வாரத்தில் ஒருமுறை, தினமும் ஐவேளை, இதெல்லாம் பத்தாது. நாம் மீன்களைப் போல. எப்போதும் நம்மைச் சுற்றிலும் கடல் வேண்டும் நமக்கு!

’அடுத்த வெள்ளிக்கிழமை மாலை சந்திப்போம்’ என்றா ஒட்டக மணிகள் சொல்கின்றன? அபத்தம்! ஒட்டகம் நடக்க நடக்க அவை தொடர்ந்து ஒன்றாக ஒலிக்கின்றன, இனிமையாகப் பேசிக்கொண்டு.

உன்னிடம் நீயே நேரம் குறித்துத்தான் வருகை தருவாயா?
விவாடதம் செய்யாதே, தர்க்கமாகப் பேசாதே.
சாவோம் வா. இக்கேள்விக்கு, மரணித்துப் பதில் சொல்வோம்.’

அன்பான தவளையிடம் எலி கேட்கிறது, ‘நீ எனக்கு என்னவென்று தெரியுமா உனக்கு? பகலில், என் உழைப்பிற்கான ஆற்றல் நீ. இரவில், நீயே என் ஆழ்ந்த நித்திரை. காலத்திற்குள் நாம் ஒன்றாய் இருப்பது போலவே காலத்திற்கு வெளியேயும் இருக்க முடியுமா?

ஸ்தூலத்தில் நாம் சந்தித்துக் கொள்வது காலையில் மட்டுமே. மீதி நேரங்களில் எல்லாம் நீ இல்லாதது என்னைத் துளைத்தெடுக்கிறது! ஐநூறு மடங்கு அதிகமாகக் குடித்துத் தொலைக்கிறேன். சாவதற்காக என்பதுபோல் சாப்பிட்டு வைக்கிறேன். தயவு செய்!

எனக்குத் தெரியும், நான் அருகதை அற்றவன். ஆனால் உன் தாராளம் மிகவும் பெரிது!
உனது சூரிய ஒளி இந்தச் சாணிக்குவியலின் மீது விழட்டும், காய வைக்கட்டும். அப்போதேனும் அது குளியலறைக்குச் சூடேற்றும் அடுப்பிற்கு எரிபொருள் ஆகும் அல்லவா?

நான் செய்து வைத்திருக்கும் அபத்தமான கேவலமான காரியங்களை எல்லாம் பார். அந்த எருவிலிருந்து மூலிகைகளும் வாசனைச் செடிகளும் வளர்கின்றன.

நிலத்தில் இந்த அற்புதங்களைச் சூரியன் செய்கிறது. எனில், பாவங்களின் எருவிலிருந்து இறைவன் எத்தகைய அற்புதங்களைச் செய்வான்!

எலி தொடர்ந்து கெஞ்சுகிறது, ‘என் நண்பனே! எனக்குத் தெரியும், உனக்கு நான் அசிங்கமானவன். எனக்கே நான் அசிங்கமானவன்! நான் அசிங்கத்தில் குறையே இல்லை!
ஆனால் பார், நான் இறந்து போய்விட்டால் மிகவும் வருத்தப்படுவாய், இல்லையா? என் கல்லறையின் அருகில் அமர்ந்து சற்றே கண்ணீர் வடிப்பாய், இல்லையா?

நான் கேட்பதெல்லாம், நான் உயிரோடிருக்கும் இந்தச் சில கணங்கள் மட்டும் என்னுடன் இரு என்பதே. இப்போ, நீ எனக்கு வேண்டும் இப்போ!

செல்வந்தன் ஒருவன் சூஃபியிடம் கேட்டான், ‘என் ஆன்மாவின் தலைவரே! இப்போதே ஒரு வெள்ளிக்காசு வேண்டுமா? அல்லது நாளை காலையில் மூன்று வேண்டுமா?’

சூஃபி சொன்னார், ‘நேற்றிலிருந்து ஏற்கனவே என் கையில் உள்ள அரை வெள்ளிக் காசு போதுமானது. இன்றைக்கான முழுக்காசோ நாளைக்கான நூறு காசுகளின் வாக்குறுதி எனக்கு எதற்கு? சூஃபி என்பவன் இக்கணத்தின் குழந்தை (சூஃபி இப்னுல் வக்த் புவத்)’
எலி மேலும் சொல்கிறது, ‘இக்கணம் என் கன்னத்தில் அறையட்டும். அதன் கையில் ரொக்கப்பணம் உள்ளது. எனக்கு அறைகள் கொடு, கழுத்தில், எங்கெங்கும்!’

என் உயிரின் உயிரே! நூறு பிரபஞ்சங்களின் ஆன்மாவே! இந்த நிகழ்கால நதியின் நீராக இரு. அதன் விளிம்பில் மல்லிகைப் பூக்கள் எழட்டும். தொலைவிலிருந்து காண்போர் இங்கு நீரிப்பதை அறிந்து கொள்ளட்டும்.

’அடையாளம் முகத்தில் உள்ளது’. தோட்டத்தைப் பார்த்து நீங்கள் சொல்லிவிடலாம், நேற்றிரவு மழை பெய்ததை. அதன் புத்துணர்ச்சியே அடையாளம்.

மீண்டும், அந்த எலி, ‘நண்பனே! நான் மண்ணால் படைக்கப்பட்டவன், மண்ணுக்கானவன். நீயோ நீரிலிருந்து. எப்போதும் நான் கரையில் இருந்தபடிக் கத்திக் கொண்டிருக்கிறேன். கருணை காட்டு. உன்னைப் பின் தொடர்ந்து நான் நீருக்குள் வர முடியாது. நாம் தொடர்பில் இருப்பதற்கு வேறு வழியேதும் இல்லையா? ஏதேனும் தூதுவர்? ஏதேனும் ஞாபகச் சின்னம்?’

இரு நண்பர்களும் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். நீளமானதொரு கயிறு! அதன் ஒருமுனை எலியின் காலிலும் மறுமுனை தவளையின் காலிலும் கட்டப்பட்டன. அந்தக் கயிற்றைச் சுண்டி இழுப்பதன் மூலம் அவற்றின் ரகசியத் தொடர்பு நினைவூட்டப்பட்டு இருவரும் சந்தித்துக் கொள்ளலாம். ஆன்மா உடலிடம் தொடர்பு கொள்வது போல்.
தவளையைப் போன்ற ஆன்மா அடிக்கடி உடலை விட்டுத் தப்பித்து ஓடிவிடுகிறது. நீரில் ஆனந்தமாய் நீந்துகிறது. பிறகு எலியான உடல் கயிற்றை இழுக்கிறது. ஆன்மா நினைக்கிறது, ‘கைசேதமே! மீண்டும் நான் கரைக்குச் சென்று அந்தக் கூறுகெட்ட எலியுடன் அரட்டை அடிக்க வேண்டும்!’

மறுமை நாளில் உயிர்த்தெழுப்பப் படும்போது இதைப் பற்றி நீங்கள் இன்னும் அதிகமாகக் கேள்விப்படுவீர்கள் அன்பர்களே!

எனவே, எலியும் தவளையும் கயிற்றைக் கட்டிக்கொண்டன, (கண்ணாலங் கட்டிக் கொண்டன!) எனினும், ஏதொ விபரீதம் நடக்கப் போகிறது என்ற மன அரிப்பு அந்தத் தவளைக்கு இருந்தது.

அத்தகைய உள்ளுதிப்புக்களை ஒருபோதும் உதாசீனம் செய்யாதீர்கள். ஒரு காரியத்தைச் செய்வது பற்றி லேசுமாசாக தயக்கம் இருப்பினும் அதற்குச் செவிகொண்டுங்கள். இந்த முன்னெச்சரிக்கைகள் இறைவனிடமிருந்து வருபவை.

அப்ரஹா கொண்டு வந்த யானைப் படையை நினைவு கூர்க. கஃபா இருக்கும் திசையில் அவை நகர மறுத்தன. அந்தத் திசையில் வாதமடித்தது போல் கிடந்தவை, யமன் தேசத்தின் திசைக்குத் திருப்பினால் வேகமாக ஓடின. மறைவிலிருந்தான ஒருவித முன்னறிவு அவற்றுக்கு இருந்தது.

அதே போல் யஃகூப் (அலை) அவர்களின் நிலை இருந்தது. அருமை மகனான யூசுஃப் நபியை அவரின் பிற மகன்கள் இரண்டு நாட்களுக்கு வெளியூருக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னபோது அது பற்றி அவரின் மனத்தில் வேதனை உண்டாயிற்று. அது உண்மையும் ஆனது. எனினும் அவரின் முன்னெச்சரிக்கையை மீறி, வழக்கம் போல், விதியில் இருந்ததே நடந்தது.

குழிக்குள் வீழ்வது எப்போதுமே குருடனாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சில நேரங்களில் பார்வை உள்ளவனும் படவேண்டி இருக்கிறது.

மகானும் சில நேரம் வீழ்ந்து விடுகிறார். ஆனால் அந்தச் சோதனையால் அவர் மேலும் உயரத்திற்கு எழுந்து, பல மாயைகளை விட்டும் தப்பித்து, சடங்குகளை விட்டும் விடுதலையாகி, காரண காரியத் தளைகளுக்கு அப்பாலாகிறார்.

இல்லாமை என்னும் பாலையிலிருந்து இந்தக் காரண காரியம் எப்படிப் புறப்பட்டு இந்த பருவுலகிற்கு வந்தது என்று சிந்திப்பாயாக.

காலையும் மாலையும் அவை வரிசையாக வந்து சேர்ந்து ஒன்றிலிருந்து ஒன்று பொறுப்பெடுத்துக் கொள்கின்றன, ‘தள்ளுப்பா, இப்போ நான் பாத்துக்கிறேன்!’

மகன் பெரியவனாகிறான். தந்தை மூட்டையைக் கட்டிவிடுகிறார்.

காரண காரியத்தாலான இந்த உலகம், ஓர் அகல நெடுஞ்சாலை. ஒவ்வொன்றும் இதில் குறுக்கும் நெடுக்குமாக விரைந்து கொண்டிருக்கின்றன.

நாம் இன்னமும் உட்கார்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். திரை மறைவிலான எண்ணங்களைப் போல் காரண காரியக் கற்பனைகள் நம் வழியாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் நம்முள் இருக்கும் காதலின் ஆழமான கிணற்றுக்குச் செல்கின்றன. அங்கே அவை தமது பானைகளை நிரப்பிக் கொண்டு கிளம்புகின்றன.

அவை புறப்பட்டு வரும் மூலம் ஒன்றுண்டு. இங்கே உள்ளே ஊற்று ஒன்றுண்டு. 

தாராளமாய் இரு. நன்றியுடன் இரு. இல்லாதபோது அதை ஒப்புக்கொள்.
இறைப்பேரறிவின் மனத்தில் என்ன உள்ளதென்று நமக்குத் தெரியாது.

இந்த எண்ணப் போக்குவரத்தின் நடுவில் நின்று கொண்டிருக்கும் நான் யார்?

ஆற்றங்கரையில் இருந்த அந்த எலியை நினைவிருக்கிறதா? தவளையை எதிர்பார்த்து நீருக்குள் நீளுமொரு காதல் கயிறு உண்டு.

சட்டென்று ஓர் அண்டங் காக்கை அந்த எலியை லாவிக்கொண்டு பறக்கிறது. ஆற்றின் ஆழத்திலிருந்து மேலெழுந்து, அந்தத் தவளையும், அதன் காலொன்றில் கட்டப்பட்ட மெல்லிய கயிற்றால் காற்றில் தொங்கியபடித் தொடர்கிறது. வியப்படைந்த முகங்கள் கேட்கின்றன, ‘எந்தக் காலத்தில் காக்கா நீருக்குள் சென்று தவளையைப் பிடித்திருக்கிறது?’
தவளை பதில் சொல்கிறது, ‘இது நட்பின் வலிமை’.

நண்பர்களை அருகே இழுப்பது இயற்கை விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை. ஆன்மிக நெருக்கம் பற்றி உருவம் ஏதும் அறியாது.

அரிசித் துகள் ஒன்று இன்னொரு அரிசித் துகளை நோக்கி நெருங்குகிறது எனில் அவற்றை எறும்புகள் சுமந்து செல்கின்றன என்று பொருள். கருப்பு நிறத் தரையில் கருப்பு எறும்பு. உங்கள் பார்வைக்கு அவை தெரிவதில்லை. ஆனால், தானியங்கள் ஒன்றிடம் ஒன்று நகர்கினறன எனில் அவை அங்கே இருக்கத்தான் செய்கின்றன.

நம் பறவைக் கூண்டுகளை கை ஒன்று இடம் மாற்றி வைக்கிறது. சில நெருக்கமாகக் கொண்டு வரப்படுகின்றன. சில தூரமாக. பகுத்தறிவு கொண்டு இதனை சிந்திக்க முயலாதே. யார் உன்னை அருகே இழுக்கிறார், யார் இழுக்கவில்லை என்பது பற்றிச் சுதாரிப்பாக இரு.
ஏசுவுடன் எப்போதும் ஜிப்ரீல் இருக்கவே செய்தார், அடர்நீல விதானம் கொண்ட இரவுக் கோட்டையான இந்த உலகிற்கு மேல் அவரைத் தூக்கிச் சென்றபடி, ஏக்கத்தின் கரிய காகம் தவளையைப் பறக்க வைத்தது போல்.

Saturday, August 2, 2014

சிரப்பணிவுஉன்னையன்றி
வேறெவரும் அறியார்
எங்கெங்கே உன்னைக் கண்டு
தலைசாய்த்தேன் நான் என்று

எப்பொருளில் நீ வெளிப்பட்டபோதும்
உனக்குத்
தலைசாய்த்துவிடுகிறது
உள்ளம்

யாருக்கும் தெரிவதில்லை
உன் பாதங்கள்
யாருக்கும் தெரிவதில்லை
என் சிரப்பணிவு

உன்னை நீ வெளிப்படுத்த
அநேக வழிகள் உனக்கு
என் சிரப் பணிவுக்கோ
ஒரே வழிமுறை மட்டுமே…
உன்னில் கரைந்து
தான் இல்லாமலாவது

தொழுகைகளால்
என் நெற்றி காய்க்கவில்லை
எனினும்
இதயத்தைக் கனியவைத்தாய்

இறைவா!
என்னில் உன்னைக் காட்டி
என்னைப் பணியவைத்தாய்!

Tuesday, July 29, 2014

ரகசியம்


உன் ஒளி                      
இசையாகி நுழைந்தது
என்னுள்

கண்ணீரில் நீராடிய
இதயத்தைக்
காதலால் தழுவினாய்

உனக்காக
உலகத்தை
உதறித் தள்ளினார்கள்
உன் பக்தர்கள்

என் இதயத்தின் விழியோ
உலகெங்கிலும்
உன்னையே காண்கிறது

உன் ஒளியில்
ஒவ்வொரு துகளும்
கண்ணாடி ஆகிவிடவில்லையா?

உன் அழகை
தரிசித்த வெறியில்
என்னுள் மூளும்
அரிதாரங்களை அழிக்கும்
கலகம்

நினக்கு
பிம்பங்கள் இருக்கலாகாதென்று
கற்களைத் தேடியலையுமொரு
கண்ணாடியோ நான்?

வெளியே தேடிய கிளைகள்
சட்டென்று கண்டுகொண்டன
ஒவ்வொரு பூவிலும்
வேரின் (சு)வாசம்

வண்ணங்களில் மறைந்திருக்கும்
ஓவியன் நீ
திரையை விலக்கிய
ஓவியம் நான்

சொல்ல முடியாதவன் நீ
சொல்லி முடியாதவன் நான்

உரை
உன் திரை
இசை உன்
இரவு உடை

என் உடல்
என் உள்ளம்
என் உயிர்
என் ரகசியம்
எல்லாம்
உன் ரகசியம்

காதலில் உயிர்
கரையும்போதெல்லாம்
உள்ளம் வாசிக்கும்
உடலில் உன் ரகசியம்

Sunday, July 20, 2014

...என்றார் சூஃபி - part7

30

இன்றைய கூட்டத்தில் சூஃபி பின்வரும் சிறிய கதையைச் சொன்னார்:
“குடிசை வீட்டில் ஒருவன் வாழ்ந்து வந்தான். வறுமை அவனை விட்டு அகலவே இல்லை. அந்தச் சிறிய குடிசையை மராமத்துச் செய்வதற்குக் கூட அவனிடம் பணம் இல்லை. காற்றிலும் மழையிலும் அது நைந்து கந்தலாகிப் போயிருந்தது. அதன் மண்-சுவர் இற்றுப் போயிருந்தது.

அவனது குடிசைக்கு எதிரே, சாலையின் அந்தப் பக்கமாக, பெரிய மச்சுவீடு ஒன்று இருந்தது. கொடுத்து வைத்த சீமான் ஒருவரின் இல்லம். அதைப் பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு ஒரே ஏக்கமாக இருந்தது. ‘ச்சே! என்ன வாழ்க்கை இது? இப்படி தரித்திரம் பிடித்து என்னை ஆட்டி வைக்கிறதே. கண் முன்னே இத்தனைப் பெரிய வீட்டில் ஒருத்தன் வாழ்கிறான். அதுவல்லவா வாழ்க்கை? இந்தக் குடிசையில் மழைக்குப் பாதுகாப்பு உண்டா? வெய்யிலுக்கு மறைப்பு உண்டா? என்றைக்காவது ஒரு நாள் அந்த வீட்டுக்குள் இருந்து பார்க்க வேண்டும்’ என்று அவன் தன் மனதிற்குள் அடிக்கடி எண்ணிக் கொள்வான். அது ஒரு சங்கற்பமாகவே அவனுக்குள் உருவாகியிருந்தது.

காலம் இப்படியாகச் சென்று கொண்டிருக்க ஒருநாள் அதிகாலையில் அந்த ஊரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி ஓடிக்கொண்டிருந்தார்கள். இவனும் குடிசையை விட்டு வெளியே வந்தான். எதிர் வீட்டுச் சீமான் தனது மனைவி மக்களோடு வீட்டைத் திறந்தபடிப் போட்டுவிட்டு வெளியே ஓடுவதைப் பார்த்தான். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவன் மனம் பரபரத்தது. ‘லூசுப்பய. இத்தனைப் பாதுகாப்பான வீட்டை விட்டு ஓடுகிறானே. இந்தக் குடிசைக்குள் இருந்து இனியும் நான் சாகவேண்டியதில்லை’ என்று நினைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பாய்ந்து எதிர்வீட்டிற்குள் – அழகான பங்களாவிற்குள் – நுழைந்தான். நிலநடுக்கத்தில் அவனது குடிசை தரைமட்டமானது. ஆனால், அதே சமயம் பங்களாவும் படுத்துவிட்டது. அவன் அதற்குள் அப்படியே சமாதி ஆகிவிட்டான்.”

இக்கதையின் மீது நாங்கள் சற்று நேரம் சிந்தனை செலுத்திக் கொண்டிருந்தோம்.
“காதலின் புயலால் கந்தலாகிக் கண்ணீர் கசியும் இதயம் உள்ளவர்களே! உங்கள் தன்முனைப்பு தரைமட்டமாகும் தருணத்தில் தப்பியோட நினைக்காதீர்கள்.” என்றார் சூஃபி.

31

சூஃபி கூறிய இன்னொரு சிறிய கதை:

“அடர்ந்து செழித்த ஒரு காட்டிற்குள் வாலிபன் ஒருவன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். உலக வாழ்க்கையின் சராசரித் தன்மையை வெறுத்து ஆனந்த மயமான ஏகாந்தமான வாழ்க்கையைத் தேடி அவன் அந்தக் காட்டிற்குள் ஓடிவந்திருந்தான். ’இயற்கையின் மடியில் இனி நானொரு குழந்தை. பறவைகளும் விலங்குகளுமே எனது உறவுகள். கைகளைப் போல் நீட்டியிருக்கும் மரக்கிளைகளில் எல்லாம் இறைவன் எனக்குச் சுவையான உணவை அள்ளித் தருகிறான். என் வாழ்வில் இனி துன்பமே இல்லை’ என்றெல்லாம் எண்ணியபடி அவன் காட்டுக்குள் குஷாலாகச் சுற்றிக் கொண்டிருந்தான். 
அவ்வாறு இருக்கையில், ஒருநாள் காட்டாற்றின் கரையில் இரண்டு மரங்களை அவன் கண்டான். ஒரு மரத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் பளபளப்பாகப் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இன்னொரு மரத்தில் முட்கள் மண்டிய கிளைகளுக்கு இடையில் சொறி பிடித்தது போன்ற கனிகள் இருந்தன. அவனுக்குப் பசியாக இருந்தது. கண்ணைக் கவர்ந்த அந்த அழகிய கனிகளை அவன் முகர்ந்து பார்த்தான். அதன் மணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. இன்னொரு மரத்தின் கனியிலும் ஒன்றைப் பறித்து முகர்ந்து பார்த்தான். அதன் துர்நாற்றம் வயிற்றைப் பிரட்டியது. அதை வெறுப்போடு வீசி எறிந்தான். பிறகு முதல் மரத்தின் அழகிய கனியை ஆர்வத்தோடு புசித்தான். அதன் சுவை வருணிப்புக்கு எட்டாததாக இருந்தது. சொர்க்கத்தின் கனியே கிடைத்துவிட்டது என்பது போல் அவன் மகிழ்ந்து இன்னும் நான்கைந்து கனிகளைத் தின்று விட்டு அந்த மரத்தின் நிழலில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் உடலெல்லாம் நீலம் பாய்ந்து வாயில் நுரை தள்ளி மல்லாந்து விழுந்து மரணித்துவிட்டான்.


சிறிது நாட்கள் கழிந்தன. மூலிகை வைத்தியன் ஒருவன் தன் மகனுடன் அந்தக் காட்டிற்குள் வந்தான். தனது குல வித்தையைத் தன் மகனுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக. செடிகள் கொடிகள் அவற்றின் இலைகள் வேர்கள் காய்கள் கனிகள் இவற்றின் தன்மைகளை எல்லாம் தன் மகனிடம் சொல்லிக் கொண்டே வந்தான். காட்டாற்றின் ஓரத்தில் ஒரு மரத்தின் அடியில் கிடந்த அந்த வாலிபனின் பிணத்தை அவர்கள் கண்டார்கள். உடலெல்லாம் விஷம் பாய்ந்து அவன் செத்துப் போயிருப்பது தெரிந்தது. அவனுக்கு அருகில் சொறிப்பழம் ஒன்று கிடந்தது.

அதைப் பார்த்துவிட்டு மகன் தந்தையிடம், ‘அப்பா! இவன் அந்தச் சொறிப் பழத்தை உண்டதால் விஷம் பாய்ந்து இறந்து போயிருக்கிறான் என்று நினைக்கிறேன். சரிதானே?’ என்று கேட்டான்.

தந்தை அவனிடம் சொன்னான், ‘நீ நினைப்பது தவறு மகனே. கீழே கிடப்பது அவன் சாப்பிடாமல் போட்டுவிட்ட பழம். அது சொறி பிடித்தது போல் இருப்பதாலும் துர்நாற்றம் அடிப்பதாலும் அது விஷப் பழமாக இருக்கலாம் என்று நினைத்தே அவன் அதை உண்ணாமல் போட்டுவிட்டான். அவன் சாப்பிட்டது, இதோ, இந்த மரத்தின் பழம். இது பார்க்க அழகாகவும் மணமாகவும் இனிப்பாகவும் இருக்கும். ஆனால் இப்பழம் கொடிய விஷம்.”

இதைக் கேட்ட மகன் தன் தந்தையிடம், ’அப்படியானால் இதற்கு விஷ முறிவு ஏதேனும் உண்டா அப்பா?’ என்று கேட்டான்.

’நிச்சயமாக. அவன் சாப்பிடாமல் கீழே போட்டிருக்கிறானே, அந்தச் சொறிப் பழம்தான் இந்த பழத்தின் விஷத்திற்கான முறிவு. அதை அவன் ஒரே ஒரு கடி சுவைத்திருந்தால் போதும். இந்த விஷமெல்லாம் முறிந்து போயிருக்கும். அத்தனை வீரியமானது அது’ என்று வைத்தியன் தன் மகனுக்குச் சொல்லிக் கொடுத்தான்.”

இந்தக் கதை ஏன் சொல்லப்பட்டது என்று நான் சிந்தனை செய்திருந்தேன். அமுதம் என்று நினைத்தது விஷமாகவும், விஷம் என்று நினைத்தது அமுதமாகவும் இருந்து விடலாம் என்பதை இக்கதை உணர்த்துகிறது என்று விளங்கினேன்.

அப்போது, “அன்பர்களே! ஆன்மிகம் என்பது ஒரு பெருங்காடு. அதில் நுழைந்து கண்ணில் கண்டதையெல்லாம் ருசிக்கலாம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அதில் விஷக் கனிகளும் உண்டு. எதை உண்ணலாம் எதைத் தொடவும் கூடாது என்பதைச் சொல்ல ஒரு வழிகாட்டி – ஞான குரு – மிகவும் அவசியம்” என்றார் சூஃபி.

32


மாதுளம்பழம் பற்றிய பிரபலமான நபிமொழியைச் சொல்லிக் கொண்டிருந்தார் சூஃபி: “மாதுளம்பழம் சொர்க்கத்தின் பழங்களில் ஒன்று. இங்கே பூமியில் விளையும் மாதுளம் கனிகளிலும் ஒவ்வொரு கனிக்குள்ளும் சொர்க்கத்தின் ஒரு விதை உண்டு. அது எது என்று நமக்குத் தெரியாது. எனவே, எவர் ஒருவர் முழுமையாக ஒரு மாதுளங்கனியை உண்பாரோ அவர் சொர்க்கத்தின் ஒரு துளியை ருசித்தவராவார்.

இது நபி(ஸல்) அவர்கள் கூறிய அருள்மொழி. சரி, ஒரு மாதுளம்பழத்தின் விதைகளில் எது சொர்க்கத்திலிருந்து வந்த ஒன்று என்பது நபிக்குத் தெரியாதா? நிச்சயமாகத் தெரியும். அவர்களின் அகப்பார்வைக்கு அது சிரமமான காரியம் அல்ல. இதுதான் அந்தச் சொர்க்கத்தின் துளி என்று அவர்கள் சட்டென்று அடையாளம் காட்டிவிட முடியும். ஆனால் அவர்கள் சொன்னது நம் போன்ற சராசரி மனிதர்களுக்காக.”

இவ்வாறு அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் ஒரு சாதகர் கேள்வி கேட்டார்: “மகானே! இப்போதெல்லாம் மாதுளம்பழம் வாங்கி வந்து உடைத்துப் பார்த்தால் அதற்குள் பல விதைகள் அழுகிக் கிடக்கின்றனவே. அந்த அழுகிய விதையில் சொர்க்கத்தின் துளியும் போய்விட்டால் என்ன செய்வது?”

“ஏன் இந்தச் சந்தேகம்? அழுகாத விதைகள் உள்ளன அல்லவா? சொர்க்கத்தின் துளி அதில் இருக்கும். ஏனெனில், சொர்க்கத்தின் துளி அழுகாது!” என்றார் சூஃபி.

(சில சமயங்களில் யாருமே சாப்பிடாமல் முழு மாதுளம்பழமும் அழுகி விடுகிறதே. அப்போது அதிலிருக்கும் சொர்க்கத்தின் துளி என்னவாகும்? என்று என் மனதிற்குள் ஒரு கேள்வி உதித்தது. நான் அதை சூஃபியிடம் கேட்கவில்லை.)

”இந்த மஜ்லிஸ் (சபை) இருக்கிறதே, அதுவும் ஒரு மாதுளங்கனிதான். சொர்க்கத்தின் துளி போன்ற புனிதர் எவராது இங்கே அவசியம் இருப்பார். அவர் யார் என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒவ்வொருவரைப் பார்க்கும் போதும் அந்த சொர்க்கத் துளி இவராக இருக்கக் கூடும் என்று பார்த்து மதிப்பளிக்க வேண்டும். “உங்களில் ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்” (வ லா தல்மிஸூ அன்ஃபுஸ(க்)கும் -49:11) என்று குர்ஆன் சொல்கிறது. இதற்கு ஹழ்றத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கொடுத்த விளக்கம்: ‘அடுத்தவரின் குறைகளைத் துருவித் திரிவதில் நேரத்தைப் போக்காதீர்’ என்பதே.


எனினும், ஒரு ஜும்மா தொழுகையின் போது, இன்னின்ன மனிதர்கள் நயவஞ்சகர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அடையாளம் காட்டி எழுப்பி விட்டார்களே! அதுபோல், அகப்பார்வை கொண்ட மனிதருக்கு அழுகிய விதைகள் அடையாளம் தெரிந்தால் அது வேறு. சாதகர்கள், எல்லா நபர்களையும் சொர்க்கத் துளிகளாகவே காண வேண்டும். அகப்பார்வை பெற்ற ஞானிகளுக்கு உண்மையான சொர்க்கத் துளிகள் யார் யார் என்று அடையாளம் தெரியும்.” என்றார் சூஃபி.

Wednesday, July 9, 2014

தூக்கத்தை விடவும்...


வைகறை நேரத் தொழுகைக்கு ஒலிக்கும் அழைப்பில் மட்டும் சிறப்பாக ஓதப்படும் வரி: “அஸ்ஸலாத்து ஃகைரும் மினன் நவ்ம்”

“தொழுகை தூக்கத்தை விடவும் மேலானது” என்பது இதன் பொருள்.

இது ஏன்? என்பதை நாம் அறிய வேண்டும்.

“தூக்கத்தில் மனிதன் இறைவனை மறந்திருக்கிறான். ஆனால் தொழுகையில் இறைவனை நினைக்கிறான். அதனால் தூக்கத்தை விடவும் தொழுகை மேலானது ஆகிறது. ஆனால், எவனது தொழுகையில் இறை நினைவு இல்லையோ அவனின் தொழுகை தூக்கத்தை விடவும் கீழானதுதான்.” என்று குருநாதர் பிலாலி ஷாஹ் ஜுஹூரி அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

இன்னொரு கோணத்தில் இன்னொரு விளக்கத்தை நாம் அடைகிறோம். அது நம் மூளையின் இயக்கம் சம்பந்தப் பட்டது.

தூக்கத்திலும் விழிப்பிலும் நம் மூளை ஒரே நிலையில் இருப்பதில்லை. அதன் இயக்கம் நமது பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. உண்மையில் மூளையின் செயல்பாடுகளையே நாம் “மனநிலை” என்னும் பெயரால் குறிப்பிடுகிறோம். “மனம் (Mind) என்பதை அளந்து ஆராய்ந்து அறிய உடலில் நமக்குக் கிடைத்திருக்கும் கருவி மூளைதான்” என்கிறார் தீபக் சோப்ரா.

மூளையின் அதிர்வுகளை அளக்கும் முறை Electro Encephalo Gram (EEG) எனப்படுகிறது. அதன் கணக்குப்படி மூளையின் அல்லது மனத்தின் நிலைகளை மருத்துவ விஞ்ஞானிகள் இப்படிப் பட்டியலிடுகிறார்கள்:

காம்மா நிலை: நொடிக்கு 30 அதிர்வுகளுக்கும் மேல். இந்நிலை சிந்தனை வயப்பட்ட நிலையில் இருப்பது.

பீட்டா நிலை: நொடிக்கு 15 முதல் 30 அதிர்வுகள். இந்நிலை விழிப்பு சுதாரிப்பு ஆகியவற்றில் இருப்பது.

ஆல்ஃபா நிலை: நொடிக்கு 9 முதல் 14 அதிர்வுகள். இந்நிலை நிம்மதி ஓய்வு அமைதி தியானம் ஆகியவற்றில் இருப்பது.

தீட்டா நிலை: நொடிக்கு 4 முதல் 8 அதிர்வுகள். இந்நிலை கனவுள்ள உறக்கம் ஆழ்ந்த ஓய்வு ஆழ்நிலை தியானம் ஆகியவற்றில் இருப்பது.

டெல்டா நிலை: நொடிக்கு 1 முதல் 3 அதிர்வுகள். இந்நிலை கனவில்லா ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது.

அதிகமாகச் சிந்திப்பதில் மூளை ஏன் விரைவாகச் சோர்வடைகிறது என்பது இப்போது புரிந்திருக்கும். மேலும், தியானம் என்பது சிந்திப்பது அல்ல என்பதும் இப்போது தெரிகிறது அல்லவா?

அதிகமாகச் சிந்திப்பவர்களே அறிவாளிகள் அல்லது சிறந்த கவிஞர்களாக, விஞ்ஞானிகளாக, மெய்ஞ்ஞானிகளாக இருப்பார்கள் என்று நாம் நினைத்து வந்திருக்கிறோம். இதிலோ தியானம் என்பது அல்ஃபா அல்லது தீட்டா நிலையாகவும் சிந்தித்தல் என்பது காம்மா நிலையாகவும் காட்டப்பட்டுள்ளது. இது ஒரு முரணாகத் தோன்றலாம்.

நியூராலஜி (மூளையியலின்) ஆராய்ச்சிக் கண்டறிதல்கள் வேறு விதமாகச் சொல்கின்றன. அதிகமாகச் சிந்திப்பது ஒருபோதும் உங்களை மேனிலைக்கு இட்டுச் செல்வதில்லை என்று அவை கூறுகின்றன. மூட்டை நிறைய செல்லாத பணம் வைத்திருப்பவன் எப்படிப் பணக்காரன் அல்லவோ அதே போல். மாறாக மில்லியன் ரூபாய்க்கு ஒரு கிரெடிட் கார்ட் வைத்திருப்பவனைப் போல் ஆழமான அமைதியான மனநிலை உள்ளவர்களே மேனிலை அடைகிறார்கள்.

“மேதைகள் எல்லா நேரங்களிலும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் என்னும் பொதுக் கருத்துக்கு மாறாக அவர்களின் மனம் சராசரியை விடவும் அமைதியாகவும் தெளிவாகவும் உள்ளது” என்கிறார் டாக்டர் தீபக் சோப்ரா.(நூல்: How To Know God, chapter #5: Strange Powers / Geniuses, Child Prodigies and Savants, p.222)

இஸ்லாம் என்றால் அமைதி வழி என்று பொருள். சலாம் என்றால் அமைதி என்று அர்த்தம். எனில், அந்த அமைதி வழியின் தொழுகை என்பது அமைதி நிலையில் நிகழ்வதாகத்தான் இருக்க வேண்டும். அதாவது தொழுகை என்பது ஆல்ஃபா நிலையில் அல்லது தீட்டா நிலையில் நிகழ்வதாக இருக்க வேண்டும்.

தொழுகைக்காக நீரால் அங்கசுத்தி (ஒளூ) செய்துகொள்கிறோம். மனதிற்குச் செய்யும் ’ஒளூ’ (Ablution) என்பது என்ன? உங்கள் மூளையின் அதிர்வுநிலையை ஆல்ஃபா அல்லது தீட்டா நிலையில் வைப்பது என்று சொல்லலாம்.

தியானம் என்பதிலும் உறக்கம் என்பதிலும் மூளை ஒரே அதிர்வு நிலையில் இருப்பதைக் காண்கிறோம். அப்படியானால் உறக்கமும் தியானமும் ஒன்றுதானா? அல்லது இரண்டும் எப்படி வேறுபடுகின்றன? என்று கேட்கலாம். இரண்டையும் வேறுபடுத்துவது சுதாரிப்பு (alertness) அல்லது பிரக்ஞை (consciousness) ஆகும்.

”உறக்கத்தில் சுதாரிப்பு அல்லது பிரக்ஞை இல்லை. ஆனால் ஓய்வுநிலை (relaxation) இருக்கிறது. தியானத்தில் அதே ஓய்வுநிலையுடன் பிரக்ஞையும் இருக்கிறது” என்பார் ஓஷோ.

உறக்கத்தை விடவும் தொழுகை மேலான நிலை ஆவது இப்படித்தான். அதாவது உறக்கத்தின் ஓய்வு நிலையுடன் பிரக்ஞையும் இருக்கும் நிலையே தொழுகைக்கான நிலை. ஆல்ஃபா அல்லது தீட்டா நிலையில் இருந்து பிசகி உங்கள் மூளை பீட்டா அல்லது காம்மா நிலைக்குப் போய்விடும் எனில் நீங்கள் தொழுகையில் இல்லை என்று சொல்லிவிடலாம்!
விழிப்பிலும் தூக்கத்தின் முழுமையான ஓய்வு நிலையில் இருப்பது என்பது சாத்தியமா? என்று ஐயம் வருகிறதா? நம் மூளையோ தூக்கத்தில் கூட ஓய்வாக இருப்பதில்லை அல்லவா?

தொழுகையில் மட்டுமல்ல, விழித்திருக்கும் நேரம் முழுவதும் இதே ஓய்வு நிலையில், ஆனால் பிரக்ஞையுடன், இருப்பவர்கள் உண்டு. அதாவது ஐவேளை தொழுகைக்கு வெளியிலும் தொழுகையின் ‘நிலை’யில் இருப்பவர்கள் உண்டு.

”தம் தொழுகையின் மீது (எப்போதும்) நிலைத்திருப்போர்” (அல்லதீனஹும் அலா சலாத்திஹிம் தாயிமூன் – 70:23)

”ஞானத்தின் தலைவாசல்” என்று சூஃபிகள் போற்றும் ஹழ்றத் அலீ (ரலி) அத்தகைய நிலையில் உன்னதமான படித்தரத்தை அடைந்தவர்கள். அன்னாரின் தொடையில் அம்பு தைத்தபோது அவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் தோழர்கள் அந்த அம்பினை உருவி எடுத்தார்கள்! அறுவை சிகிச்சைக்குத் தேவையான ஓய்வு நிலை. ஆனால் முழுமையான விழிப்புணர்வுடன்!

இத்தகைய நிலையில் இருக்கும் மனிதர்கள் யார்? அவர்கள் அந்த நிலையை எப்படி அடைந்தார்கள்? என்பதைப் பார்க்கலாம்.

மனிதனின் மனத்தை சஞ்சலப்படுத்தும் விஷயங்கள் என்று அச்சம் மற்றும் கவலை ஆகியவற்றைக் கூறலாம். என்ன ஆகுமோ என்னும் அச்சம். இப்படி ஆகிவிட்டதே என்னும் கவலை. இப்படி ஆகிவிடுமோ என்னும் அச்சம். இப்படி ஆகவில்லையே என்னும் கவலை. இவ்விரு விஷயங்களை விட்டும் விடுதலை அடைந்த ஒரு கூட்டத்தை குர்ஆன் அடையாளம் காட்டுகிறது:

”அறிந்துகொள்க. நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” (அலா இன்ன அவ்லியா அல்லாஹி லா ஃகவ்ஃபுன் அலைஹி வ லா ஹும் யஹ்ஸனூன் -10:62)

அவர்களின் மனத்தை மட்டும் அச்சமும் கவலையும் தீண்டாதது எப்படி என்று கேட்கலாம்.
அவர்கள் கடவுளை அடைந்தவர்கள். தம் உள்ளே கடந்து கடவுளை அடைந்தவர்கள். இறைவனைத் தம் இதயத்தில் குடி வைத்தவர்கள்.


இறைவனை அச்சமும் கவலையும் தீண்டுவதில்லையே!